Dienstag, 8. Dezember 2015

ஏனோக்

ஏனோக்

ஆண்டவரை தன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட ஏனோக்கு
ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
23. ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம்.
24. ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக் கொண்டார். ஆதி 5:22-24

என்ன சகோதரனே! வித்தியாசமாக இருக்கிறது என்று கருதுகிறீர்களா! ஆம்! வித்தியாசமே. ஏனோக்கு வாழ்ந்த நாளெல்லாம் 365 வருடங்கள் என்பது நமக்கு தெரியும். ஆனால் ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்த வருடங்கள் 300 மட்டுமே. அதுவரையும் தேவனுக்கும் அவனுக்கும் உள்ள உறவுகள் நமக்கு தெரியாது..
ஆனால் ஒன்றை மிக தெளிவாக பரிசுத்த ஆவியானவரின் துணையோடு நாம் அறிந்து கொள்ளலாம். அது என்ன வென்றால், அவனுக்கு 65 வயதில் தான் மெத்தூசலா பிறந்தான். இந்த சம்பவம் ஏதோ ஒரு வகையில் ஏனோக்கை தேவனிடத்தில் நெருங்க செய்திருக்கலாம். அல்லது மெத்தூசலாவின் பிறப்பில் ஏதாவது கடினமான சூழ்நிலை இருந்திருக்கலாம்.. வேறு வழியில்லாமல் அவருடைய பாதத்தில் விழுந்து அவருக்காக வாழ தன்னுடைய வாழ்வை தேவாதி தேவனுக்கு அர்ப்பணித்திருக்கலாம். அதாவது தனது 65 வது வயதில் ஏனோக்கு ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்கிறான். ஆதியில் இழந்து போன அந்த உறவு புதுப்பிக்கப்பட்டு தேவன் அப்பாகவும், ஏனோக்கு பிள்ளையாகவும் மாறுகிறார்கள். (யோவா1:12) ஆம்! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
மெத்தூசலா என்றால் என்ன?
தன்னுடைய மகன் பிறந்ததும் என்ன பெயர் வைக்க வேண்டும் என்று www.babynames.com என்று தேட வில்லை. ஏனெனில் ஏனோக்கு மறுபடியும் பிறந்த அனுபவம் இருந்தபடியினால் தேவன் அவரோடுகூட தங்கி, தேவனே தன்னை ஆட்சி செய்கிறார் என்பதை அறிந்திருந்த படியினால், தன்னுடைய எந்த காரியமா யிருந்தாலும் தேவனிடத்தில் கேட்டு தான் செய்வார். ஆகையால் தன் மகனுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தேவனிடத்தில் நிச்சயமாக கேட்டிருப்பார். அந்த வகையில் அவர் தேவனுடைய பாதத்தில் காத்திருக்கும் போது தேவன் ஒரு வெளிப்பாட்டைக் கொடுத்தார். அதாவது மெத்தூசலாஸ்ரீஅவனது மரணம் அது நிகழும் (நியாயதீர்ப்பு). இந்த வெளிப்பாடு தான் மெத்தூசலா. இப்பொழுது புரிந்ததா?.. ஆம் அப்படியே தேவன் நோவா காலத்திலுள்ள நியாய தீர்ப்பை மெத்தூசலா மூலமாக முன்னறிவித்தார்…
தேவனோடு நடந்தான்
ஆம், இரட்சிக்கப்பட்ட பின் ஏனோக்கு தேவனோடு  நடந்தான். அதாவது இவர் இருதயம் புதுப்பிக்கப்பட்ட படியால், தேவன் இவரோடு பேச ஆரம்பித்தார். இது ரொம்ப முக்கியம்…..
பொதுவாக நாம் தேவனோடு (ஜெபம்) அதிகமாக பேசுவோம்.. ஆனால் அவரை பேச விடுவதே இல்லை. பரிசுத்த வேதாகமம் சொல்கிறது, ஆடுகள் என் சத்தத்துக்கு செவி கொடுக்கிறது.(யோவா 10-ம் அதிகாரம்) நாம் அவருடைய சத்தத்தை கேட்கிறோமா! அல்லது ஒருதலை பேச்சு மட்டும் தானா? இங்கே ஏனோக்கும் தேவனும் மாறி மாறி பேசினார்கள். அதுதான் சஞ்சரிப்பு என்று வாசிக்கிறோம். சிலர் தனியாக இருக்கும் போது ஆவிக்குரிய வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆனால் குடும்பம் ஆன பிறகு தேவனோடு பேச நேரம் இருப்பதில்லை. ஆனால் ஏனோக்கோ குடும்ப சூழ்நிலைகளிலும் தேவனோடு அதிக நேரங்கள் செலவளித்தான். அதாவது தேவனுக்கும், குடும்பத்திற்கும் தரவேண்டிய நேரத்தை சரியாக தந்து அங்கேயும் சாட்சியை பாதுகாத்துக் கொண்டான்.
சாட்சியை காத்துக் கொண்ட ஏனோக்கு
தேவனுக்கு பிரியமானவன் என்று ஏனோக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன் பாகவே சாட்சி பெற்றான். (எபி 11:5).
ஆம்! அவன் தன்னுடைய பேச்சில், நடத்தையில், வாழ்வில் எல்லாவிதத்திலும் தேவனுக்கு பிரியமாகவே இருந்தார். ஆகவே ஏனோக்கு வாழ்ந்த காலத்தில் உள்ள ஜனங்கள் அவனைக் குறித்து இவன் தேவனுக்கு பிரியமானவன் என்று சாட்சி கொடுத்தார்கள்.

இந்த காலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற நாம் இதில் கோட்டையைவிட்டுவிடுகிறோம். பெருமைக்காக நிறைய காரியங்கள் செய்து மக்கள் மத்தியில் ஒரு வேளை நல்ல பெயர் வாங்கலாம்…. ஆனால் தேவன் அந்தரங்க வாழ்வை பரிசோதிப்பாரே.. கவனம் ஐயா! கவனம்.


கர்த்தர் வருகையை முன்னறிவித்தவன்
யூதா 14, 15 வசனங்களில், ஏனோக்கு தான் வாழ்ந்த கால கட்டத்தில் பரிசுத்தவான்களோடு ஏனோக்குக்கு ஐக்கியம் இருந்தது என்று வாசிக்கிறோம். ஆகையால் தேவனுடைய வருகையை அவர் பரிசுத்தவான்களோடு கூட முன்னறிவித்தார். எனவே தன்னுடைய ஜனங்கள் அவபக்தியாய் செய்து வந்த கிரியைகளை உணர்த்தி அவர்களை கடிந்து கொண்டார் அல்லது கண்டித்து பிரசங்கம் செய்கிறவராயும் காணப்பட்டார். எனக்கு அருமையான தேவ பிள்ளைகளே இந்த கடைசிகாலத்தில் சுகபோக உபதேசங்கள் செய்து மாய்மால வார்த்தைகளால் ஒரு கூட்ட ஜனங்களை வஞ்சித்து பரலோகத்திற்கு தூரப்படுத்துகிறவர்களை இனங்கண்டுங்கொள்ளுங்கள். ஆசீர்வாதங்களை மாத்திரம் பேசுகிறவர்கள் தேவ வெளிப்பாடற்றவர்கள் அவர்கள் தேவனோடு சஞ்சரிப்பதில்லை. ஆனால் நோவா எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பு தன்னுடைய ஜனங்களின் அவபக்தியை கண்டித்து உணர்த்தினானே, நம்முடைய ஆண்டவர் அன்று ஆலயத்தை வியாபாரக்கூட்டமாக மாற்றும் போது சாட்டை வைத்து அடித்தாரே…
ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனேக்கும் இவர்களைக் குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிற தற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும்,
தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான் யூதா 1:14,15

உலகத்தோடு ஒத்துப்போகிற தேவ ஜனங்களின் அவபக்தியை தட்டி கேட்க ஆட்கள் இல்லையே என்ற கவலை எனக்கு உண்டு, ஊழியக்காரார்களே! நீங்கள் சிந்தியுங்கள்....
பரிசுத்தவான்கள் எடுத்துக் கொள்ளப்படுதல்
பரிசுத்த வேதாகமத்தில் ஏற்கனவே நாம் கற்றுக் கொண்டது போல பழைய ஏற்பாடு நிஜத்திற்கு நிழலாட்டமாக இருக்கிறது. ஆதியாகமம் 5-ம் அதிகாரத்தில் ஆதாம்(வச5), சேத்(வச8), ஏனோசு(வச11), கேனான் (வச14), மகலாலேயேல்(வச17), யாரேத்(வச20)….. இவர்களெல்லாம் மரித்தார்கள். ஆனால் ஏனோக்கோ உயிரோடு எடுத்துக் கொள்ளப்பட்டார். இது எதைக் குறிக்கிறது என்றால் உயிரோடே எடுத்துக் கொள்கிறதை குறிக்கிறது.
ஆண்டவருடைய படைப்பில் மரணத்தை அவர் மனிதனுக்கு தீர்மானிக்கவில்லை. இந்த பூமியில் பூரணமாய் வாழ்ந்த பிற்பாடு பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளும் விதமாகவே தேவன் மனிதனைப் படைத்தார். ஆனால் அந்த நல்ல திட்டம் ஆதாமுடைய தவறால் முழு மனித சமுதாயத்திற்கும் மரணம் மனிதனுக்கு நேர்ந்தது என்பதை நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை. அருமையான வர்களே பரிசுத்தமாய் நீங்களும் நடப்பீர்களா? என்ற ஏககத்தோடு உங்கள் முன்பு நிற்கிறேன்.
தேவனுடைய இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்படு வதற்கு ஆயத்தமாகுங்கள்.
உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள். நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷ குமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள். மத் 24: 42-44
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்

Keine Kommentare:

Kommentar veröffentlichen