Dienstag, 8. Dezember 2015

ஏனோக்

ஏனோக்

ஆண்டவரை தன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட ஏனோக்கு
ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
23. ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம்.
24. ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக் கொண்டார். ஆதி 5:22-24

என்ன சகோதரனே! வித்தியாசமாக இருக்கிறது என்று கருதுகிறீர்களா! ஆம்! வித்தியாசமே. ஏனோக்கு வாழ்ந்த நாளெல்லாம் 365 வருடங்கள் என்பது நமக்கு தெரியும். ஆனால் ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்த வருடங்கள் 300 மட்டுமே. அதுவரையும் தேவனுக்கும் அவனுக்கும் உள்ள உறவுகள் நமக்கு தெரியாது..
ஆனால் ஒன்றை மிக தெளிவாக பரிசுத்த ஆவியானவரின் துணையோடு நாம் அறிந்து கொள்ளலாம். அது என்ன வென்றால், அவனுக்கு 65 வயதில் தான் மெத்தூசலா பிறந்தான். இந்த சம்பவம் ஏதோ ஒரு வகையில் ஏனோக்கை தேவனிடத்தில் நெருங்க செய்திருக்கலாம். அல்லது மெத்தூசலாவின் பிறப்பில் ஏதாவது கடினமான சூழ்நிலை இருந்திருக்கலாம்.. வேறு வழியில்லாமல் அவருடைய பாதத்தில் விழுந்து அவருக்காக வாழ தன்னுடைய வாழ்வை தேவாதி தேவனுக்கு அர்ப்பணித்திருக்கலாம். அதாவது தனது 65 வது வயதில் ஏனோக்கு ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்கிறான். ஆதியில் இழந்து போன அந்த உறவு புதுப்பிக்கப்பட்டு தேவன் அப்பாகவும், ஏனோக்கு பிள்ளையாகவும் மாறுகிறார்கள். (யோவா1:12) ஆம்! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
மெத்தூசலா என்றால் என்ன?
தன்னுடைய மகன் பிறந்ததும் என்ன பெயர் வைக்க வேண்டும் என்று www.babynames.com என்று தேட வில்லை. ஏனெனில் ஏனோக்கு மறுபடியும் பிறந்த அனுபவம் இருந்தபடியினால் தேவன் அவரோடுகூட தங்கி, தேவனே தன்னை ஆட்சி செய்கிறார் என்பதை அறிந்திருந்த படியினால், தன்னுடைய எந்த காரியமா யிருந்தாலும் தேவனிடத்தில் கேட்டு தான் செய்வார். ஆகையால் தன் மகனுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தேவனிடத்தில் நிச்சயமாக கேட்டிருப்பார். அந்த வகையில் அவர் தேவனுடைய பாதத்தில் காத்திருக்கும் போது தேவன் ஒரு வெளிப்பாட்டைக் கொடுத்தார். அதாவது மெத்தூசலாஸ்ரீஅவனது மரணம் அது நிகழும் (நியாயதீர்ப்பு). இந்த வெளிப்பாடு தான் மெத்தூசலா. இப்பொழுது புரிந்ததா?.. ஆம் அப்படியே தேவன் நோவா காலத்திலுள்ள நியாய தீர்ப்பை மெத்தூசலா மூலமாக முன்னறிவித்தார்…
தேவனோடு நடந்தான்
ஆம், இரட்சிக்கப்பட்ட பின் ஏனோக்கு தேவனோடு  நடந்தான். அதாவது இவர் இருதயம் புதுப்பிக்கப்பட்ட படியால், தேவன் இவரோடு பேச ஆரம்பித்தார். இது ரொம்ப முக்கியம்…..
பொதுவாக நாம் தேவனோடு (ஜெபம்) அதிகமாக பேசுவோம்.. ஆனால் அவரை பேச விடுவதே இல்லை. பரிசுத்த வேதாகமம் சொல்கிறது, ஆடுகள் என் சத்தத்துக்கு செவி கொடுக்கிறது.(யோவா 10-ம் அதிகாரம்) நாம் அவருடைய சத்தத்தை கேட்கிறோமா! அல்லது ஒருதலை பேச்சு மட்டும் தானா? இங்கே ஏனோக்கும் தேவனும் மாறி மாறி பேசினார்கள். அதுதான் சஞ்சரிப்பு என்று வாசிக்கிறோம். சிலர் தனியாக இருக்கும் போது ஆவிக்குரிய வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆனால் குடும்பம் ஆன பிறகு தேவனோடு பேச நேரம் இருப்பதில்லை. ஆனால் ஏனோக்கோ குடும்ப சூழ்நிலைகளிலும் தேவனோடு அதிக நேரங்கள் செலவளித்தான். அதாவது தேவனுக்கும், குடும்பத்திற்கும் தரவேண்டிய நேரத்தை சரியாக தந்து அங்கேயும் சாட்சியை பாதுகாத்துக் கொண்டான்.
சாட்சியை காத்துக் கொண்ட ஏனோக்கு
தேவனுக்கு பிரியமானவன் என்று ஏனோக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன் பாகவே சாட்சி பெற்றான். (எபி 11:5).
ஆம்! அவன் தன்னுடைய பேச்சில், நடத்தையில், வாழ்வில் எல்லாவிதத்திலும் தேவனுக்கு பிரியமாகவே இருந்தார். ஆகவே ஏனோக்கு வாழ்ந்த காலத்தில் உள்ள ஜனங்கள் அவனைக் குறித்து இவன் தேவனுக்கு பிரியமானவன் என்று சாட்சி கொடுத்தார்கள்.

இந்த காலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற நாம் இதில் கோட்டையைவிட்டுவிடுகிறோம். பெருமைக்காக நிறைய காரியங்கள் செய்து மக்கள் மத்தியில் ஒரு வேளை நல்ல பெயர் வாங்கலாம்…. ஆனால் தேவன் அந்தரங்க வாழ்வை பரிசோதிப்பாரே.. கவனம் ஐயா! கவனம்.


கர்த்தர் வருகையை முன்னறிவித்தவன்
யூதா 14, 15 வசனங்களில், ஏனோக்கு தான் வாழ்ந்த கால கட்டத்தில் பரிசுத்தவான்களோடு ஏனோக்குக்கு ஐக்கியம் இருந்தது என்று வாசிக்கிறோம். ஆகையால் தேவனுடைய வருகையை அவர் பரிசுத்தவான்களோடு கூட முன்னறிவித்தார். எனவே தன்னுடைய ஜனங்கள் அவபக்தியாய் செய்து வந்த கிரியைகளை உணர்த்தி அவர்களை கடிந்து கொண்டார் அல்லது கண்டித்து பிரசங்கம் செய்கிறவராயும் காணப்பட்டார். எனக்கு அருமையான தேவ பிள்ளைகளே இந்த கடைசிகாலத்தில் சுகபோக உபதேசங்கள் செய்து மாய்மால வார்த்தைகளால் ஒரு கூட்ட ஜனங்களை வஞ்சித்து பரலோகத்திற்கு தூரப்படுத்துகிறவர்களை இனங்கண்டுங்கொள்ளுங்கள். ஆசீர்வாதங்களை மாத்திரம் பேசுகிறவர்கள் தேவ வெளிப்பாடற்றவர்கள் அவர்கள் தேவனோடு சஞ்சரிப்பதில்லை. ஆனால் நோவா எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பு தன்னுடைய ஜனங்களின் அவபக்தியை கண்டித்து உணர்த்தினானே, நம்முடைய ஆண்டவர் அன்று ஆலயத்தை வியாபாரக்கூட்டமாக மாற்றும் போது சாட்டை வைத்து அடித்தாரே…
ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனேக்கும் இவர்களைக் குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிற தற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும்,
தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான் யூதா 1:14,15

உலகத்தோடு ஒத்துப்போகிற தேவ ஜனங்களின் அவபக்தியை தட்டி கேட்க ஆட்கள் இல்லையே என்ற கவலை எனக்கு உண்டு, ஊழியக்காரார்களே! நீங்கள் சிந்தியுங்கள்....
பரிசுத்தவான்கள் எடுத்துக் கொள்ளப்படுதல்
பரிசுத்த வேதாகமத்தில் ஏற்கனவே நாம் கற்றுக் கொண்டது போல பழைய ஏற்பாடு நிஜத்திற்கு நிழலாட்டமாக இருக்கிறது. ஆதியாகமம் 5-ம் அதிகாரத்தில் ஆதாம்(வச5), சேத்(வச8), ஏனோசு(வச11), கேனான் (வச14), மகலாலேயேல்(வச17), யாரேத்(வச20)….. இவர்களெல்லாம் மரித்தார்கள். ஆனால் ஏனோக்கோ உயிரோடு எடுத்துக் கொள்ளப்பட்டார். இது எதைக் குறிக்கிறது என்றால் உயிரோடே எடுத்துக் கொள்கிறதை குறிக்கிறது.
ஆண்டவருடைய படைப்பில் மரணத்தை அவர் மனிதனுக்கு தீர்மானிக்கவில்லை. இந்த பூமியில் பூரணமாய் வாழ்ந்த பிற்பாடு பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளும் விதமாகவே தேவன் மனிதனைப் படைத்தார். ஆனால் அந்த நல்ல திட்டம் ஆதாமுடைய தவறால் முழு மனித சமுதாயத்திற்கும் மரணம் மனிதனுக்கு நேர்ந்தது என்பதை நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை. அருமையான வர்களே பரிசுத்தமாய் நீங்களும் நடப்பீர்களா? என்ற ஏககத்தோடு உங்கள் முன்பு நிற்கிறேன்.
தேவனுடைய இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்படு வதற்கு ஆயத்தமாகுங்கள்.
உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள். நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷ குமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள். மத் 24: 42-44
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்

Montag, 7. Dezember 2015

கானான் சபிக்கப்பட்டது ஏன்?



வேதாகமத்தை வாசிக்கும் போது நமக்குள்ளாக கேள்விகள் எழுவது இயற்கையே, கேள்விகள் வந்தால்தான் நாம் சரியாக வேதாகமத்தை கவனித்து வாசிக்கிறோம் என்று பொருள். கேள்விகள் வரலாம், அதே வேளையில் சந்தேகம் வரக்கூடாது. தவறுதலாக புரிந்து கொள்ளக்கூடாது. தனக்கு புரியாதவைகளை இல்லை என்றும் சொல்லக் கூடாது.
வெள்ளத்தினால் உலகம் அழிந்த பிறகு, புதிய பூமியில் முதல் குடும்பமான நோவாவின் குடும்பத்தில் நடந்த சம்பவத்தை குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு நாள் நோவா “திராட்சரசத்தைக் குடித்துவெறிகொண்டுதன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான்’’ (ஆதி 9:21) என்று வாசிக்கிறோம்.
தேவ கிருபை பெற்ற தேவ மனிதன். புதிய பூமியில் புதிய மனிதன் நோவா, குடித்து, வெறிக்கிறவனா? வேதாகமம் இதை அனுமதிக்கிறதா? என்றெல்லாம் நமக்குள் கேள்விகள் எழும்பும். இந்த கேள்விகளுக்கெல்லாம் வேதாகமத்தின் மூலம் கிடைக்கும் பதில் தேவ மனிதன் நோவா குடித்து வெறிக்கிறவன் இல்லை என்பதுதான்.
எப்படி என்றால், நோவா நாட்களில் இரவும் பகலும் 40 நாட்கள் தொடர் மழை பெய்து பெரும் வெள்ளம் ஏற்ப்பட்டது என்று வேதம் நமக்கு கூறுகிறது.
ஆனால் அதற்கு முன்பாக மழையையே மக்கள் பார்த்தது இல்லை. ஏன் என்றால் மழை பெய்யவில்லை. “அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பிபூமியையெல்லாம் நனைத்தது’’ (ஆதி 2:6) என்று வேதம் கூறுகிறது. நோவா நாட்கள் வரை பூமியில் மழை பெய்யாமல், மூடு பனிதான் பூமியை நனைத்தது.
அதே போல், நோவாவின் நாட்களில் நடந்த வெள்ளப்பெருக்கிற்கு முன், சீதோஷண நிலை மாறி மாறி இருக்க வில்லை. உலகமெங்கும் ஒரே சீதோஷண நிலைதான் இருந்திருக்கிறது.
நோவாவின் நாட்களில் பெய்த மழைக்கு பின்புதான் சீதோஷண நிலையில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. சீதோஷண நிலை மாற்றத்தை உணராத நோவா எப்போதும் போல் திராட்சைரசத்தைக் குடித்த போது, அதன் தன்மை மாறி, கிரு கிருப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நோவா தெரிந்து அதை குடிக்காமல், தெரியாமலேயே அதைக் குடித்திருக்கலாம். வேதம் எந்த காலத்திலும் மனிதன் தன்னுடைய சுய சிந்தையை இழக்கச் செய்யும் போதை வகைகளை அனுமதிக்க வில்லை. 
சீதோஷண நிலை மாறுபாட்டால் திராட்சைரசத்தில் உண்டான புளிப்பு தன்மை நோவாவுக்குள் போதையாகி, வெறிக்க செய்திருக்கலாம். அந்த நிலையில் சுய நினைவு அற்றவனாக நோவா தான் அணிந்து இருந்த உடை விலகி இருப்பது கூட தெரியாமல் படுத்திருக்கையில்தான்
நோவாவின் இளைய குமாரன் காம், தன்னுடைய தகப்பனின் நிர்வாணத்தைக் கண்ட போது அது அவனுக்கு வேடிக்கையாகவும், விநோதமாகவும் இருக்க, தன்னுடைய சகோதரர்களுக்கும் அதை வேடிக்கையாக அறிவித்து, பரியாசம் பண்ணுகிறான்.
ஆனால் நோவாவின் மற்ற பிள்ளைகளோ, அதை பரியாசம் பண்ணாமல், தன்னுடைய தகப்பனின் நிர்வாணத்தை காணக்கூடாது என்பதற்காக பின்னிட்டு சென்று, நோவாவின் நிர்வாணத்தை மூடினார்கள் என்று வேதம் கூறுகிறது.
மனிதனின் சிறு குறைகளையும், மதியீனத்தையும், வேதம் ஏன் சுட்டி காட்டுகிறது என்றால், இப்படிப்பட்ட செயல்களை செய்யக்கூடாது என்று வலியுறுத்தி திருஷ்டாந்தமாகவே எழுதப்பட்டுள்ளது.
ஆனால் இந்த செயலுக்கு நவீன கால வேத வியாக்கியானிகள் பல வடிவங்களை கொடுத்து, அருவெறுக்கத்தக்க விதத்தில் வியாக்கியானம் செய்கிறார்கள். எப்படியெனில் நோவாவுடன், ஓரின சேர்க்கையில் காம் ஈடு பட்டிருக்கலாம் ஆகையால்தான் நோவா சாபம் கொடுத்தான். அப்படி செய்யாவிட்டால் சாதாரணமாக நோவா எப்படி சாபம் கொடுத்திருப்பான் என்றும், மறைவானவைகளை கர்த்தர் எங்களுக்கு வெளிப்படுத்தினார் என்றும், வேதாகம சம்பவங்களுக்கு விரோதமாக வியாக்கியானித்து. விசுவாச வாழ்வில் உள்ள மக்களை வழி விலக செய்ய பிசாசினால் ஆளப்படுகிறவர்கள். அப்படிப்பட்ட  பொல்லாதவர்களை வேத சத்தியங்கள் மூலம் விசுவாச மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.அப்படிப்பட்டவர்களை விட்டு விலகவும் வேண்டும்.
இப்படி வேதாகமத்திற்கு விரோதமாக வியாக்கியானம் செய்யும் நபர்கள் தப்பாகவே வியாக்கியானம் செய்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் என்னவென்றால், தன் தகப்பனோடு தகாத உறவில் காம் ஈடுபட்டிருப்பானால், அதை எப்படி தன் சகோதரர்களுக்கு அறிவித்திருப்பான். தான் செய்த தவறை ஒருவன் மறைக்கதான் பார்ப்பான். மாறாக அதை வெளிப்படுத்த மாட்டான். எனவே இங்கு தன் தகப்பனின் நிலையை ஏளனம், செய்து பரியாசம் செய்த செயலாகவே வேதம் திட்டமாக விவரிக்கிறது.
எனவே அப்படிப்பட்ட வியாக்கியானங்கள் முழுக்க முழுக்க வேதாகமத்திற்கு புறம்பாகவும், விரோதமாகவும் இருக்கிறது. 
இங்கு தன்னுடைய நிர்வாணத்தைக் கண்டு, மறைக்காமல், அதை தூற்றி மற்ற சகோதரர்களுக்கும் அறிவித்து, தகப்பனுக்கு கொடுக்க வேண்டிய கனத்தை கொடுக்க தவறிய கானானின் சந்ததி நோவா மூலம் சபிக்கப்படுகிறது என்பதுதான் வேதாகம உண்மை.
மேலும் காம் செய்த தவறுக்கு, கானான் ஏன் சபிக்கப்பட்டான் என்பது மற்றுமொரு கேள்வி. 
“நோவா திராட்சரசத்தின் வெறி தெளிந்து விழித்தபோதுதன் இளைய குமாரன் தனக்குச் செய்ததை அறிந்து: கானான் சபிக்கப்பட்டவன்தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான்’’ (ஆதி 9:24,25)
தனக்கு நேர்ந்தது என்ன என்பதை அறியாமல் நிர்வாணமாக படுத்திருந்த நோவா, எழுந்த பின் தனக்கு சம்பவித்த எல்லாவற்றையும் அறிந்து, ஏன் தவறு செய்த தன்னுடைய மகனை சபிக்காமல், கானானை சபிக்க வேண்டும்.
வேதம் காமை அடையாளப்படுத்தும் போது, “கானானுக்குத் தகப்பனாகிய காம்  என்று 22 ம் வசனத்தில் அறிமுகப்படுத்துவதை கவனிக்க வேண்டும். அப்படியானால் அந்த நாட்களில் நோவாவின் பிள்ளைகளும் அவர்களுக்கு பிள்ளைகளும் பிறந்து மக்கள் திரளாகி விட்டார்கள்.
எப்போதும் நாம் வேத வசனத்தை வாசிக்கையில் ஒருசில வேத பகுதியில், ஒரு வசனத்திற்கும், அடுத்த வசனத்திற்கும் பல வருட இடைவெளிகள் இருப்பதை அறிந்து வாசிக்க வேண்டும்.
அப்படிதான் இந்த சம்பவத்திலும் காணப்படுகிறது. நோவாவின் குடும்பம் பேழையை விட்டு இறங்கி பல ஆண்டுகளுக்குப் பின் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்புக்கள் உண்டு.
காம் பிள்ளைகள் பெற்று, காமின் மகன் கானானுக்கும் பிள்ளைகள் பிறந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.
ஆகவேதான் காம் செய்த செயலுக்கு காமை மட்டும் சபிக்காமல், கானான் முதல் அவன் சந்ததி முழுவதையும் நோவா சபிக்கிறான். தகப்பனின் சாபம் பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகளையும் தொடரும் என்று வேதம் கூறுகிறது. யாத் 20:5, யாத் 34:7) .(ஆனாலும் அந்த சாபமும் பின்நாட்களில் இயேசு கிறிஸ்துவினால் உடைக்கப்பட்டது. அல்லேலூயா)
நோவா கொடுத்த சாபம், தகப்பன் செய்த பாவம், அவன் தலைமுறையை பாதிக்கும் என்பதை காண்பிக்கிறது. ஒருவன் பாவம் செய்தால் அந்த பாவம் அவனோடு முடிந்து விடாமல், எப்படி அவன் சந்ததியே பாதிக்கப்படுகிறது என்பதை அறியத்தருகிறது.
அதேவேளையில்  “சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாககானான் அவனுக்கு அடிமையாயிருப்பான்.யாப்பேத்தை தேவன் விருத்தியாக்குவார்அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான்கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான் என்றான்’’ (ஆதி 9:26,27).
தகப்பனுடைய நிர்வாணத்தை பரியாசம் பண்ணாமல், அதை பார்க்க துணியாமல், பின்னாக சென்று மூடிய காமின் சகோதரர்களின் சந்ததி ஆசீர்வாதம் பெறுகிறதையும், ஆசீர்வாதமாக வாழ்வதையும், அது மட்டுமல்ல, உலக இரட்சகரை உலகத்திற்கு கொடுத்த பாக்கியமுள்ள சந்ததியாகவும் விளங்கியதை நாம் மறக்கலாகாது.
மற்றவர்களை இழிவு படுத்தவும், பரியாசம் செய்யவும் முற்படுகிறவர்கள் தங்களுக்கு மட்டுமல்ல, தங்கள் தலைமுறைக்கே சாபத்தை சம்பாதிக்கிறார்கள்.
விளையாட்டைப்போல காம் செய்த தவறு, சரித்திரத்தில் அவன் சந்ததி சாபமாக்கப்பட காரணமாகி விட்ட வரலாறுதான் இவைகள்.